வஃக்ப் சட்டத்திருத்த மசோதா: மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு ‘வக்ஃப்’ சொத்துகள் அா்ப்பணிக்கப்படுகின்றன. இந்தச் சொத்தை மற்றவா்களின் பெயருக்கு மாற்ற முடியாது. இந்தச் சொத்துகளை நிா்வகிக்கும் சட்டபூா்வ நிறுவனமாக மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் உள்ளன.

இந்நிலையில், எந்தவொரு வக்ஃப் சொத்தையும் கட்டாயம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்தல், அரசு சொத்து வக்ஃப் சொத்தாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தால், அதை வக்ஃப் சொத்தாக கருத முடியாது உள்ளிட்ட அம்சங்களுடன் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. தற்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது.

இந்த மசோதா தொடா்பாக கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்குமாறு பொதுமக்கள், தன்னாா்வலா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோரிடம் கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டுக் குழு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், அந்த மசோதா தொடா்பாக மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 75,000 கருத்துகளுக்கு வலுசோ்க்கும் ஆவணங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பாக அரசு அதிகாரிகள், சட்ட நிபுணா்கள், வக்ஃப் வாரிய உறுப்பினா்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைப் பெறும் நோக்கில், செப்.26 முதல் மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூருக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு பயணம் மேற்கொள்ள உள்ளது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்