பள்ளிகளுக்குச் செல்லாமல் நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் சென்றுள்ளதை ஆதரித்த பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அந்த வகையில், ராஜஸ்தான், தில்லியில் 21 பள்ளிகளின் அங்கீகாரத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி ராஜஸ்தான், தில்லியில் 27 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மாணாக்கரின் வருகைப் பதிவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பெரும்பாலானோர் வகுப்புகளுக்கு செல்லாமல் நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு சென்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த நடவடிக்கை இன்று(நவ.6) எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேல்நிலைப் பள்ளிகளாக இருந்த 6 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் தாழ்த்தப்பட்டுள்ளன.
இது குறித்து விளக்கம் கேட்டு மேற்கண்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு மாதத்துக்குள் விளக்கமளிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.