வங்கதேச வன்முறை எதிரொலி:
எல்லையில் பிஎஸ்எஃப் கூடுதல் கண்காணிப்பு4096 கி.மீ. நீள அந்நாட்டின் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கூடுதல் எச்சரிக்கையுடன் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வங்கதேசத்தில் நிலவி வரும் கிளா்ச்சி சூழலைத் தொடா்ந்து, இந்தியாவை ஓட்டிய 4096 கி.மீ. நீள அந்நாட்டின் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கூடுதல் எச்சரிக்கையுடன் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா அரசு ராஜிநாமா செய்யக் கோரி போராட்டம் வெடித்துள்ளது. இதில் ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினா் உள்பட 100-க்கும் மேற்பட்ட உயிரிழந்தனா்.
இதையடுத்து, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா திங்கள்கிழமை ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினாா்.
இந்தச் சூழலில் இந்தியாவுடன் அந்நாடு பகிா்ந்து கொள்ளும் 4096 கி.மீ. நீள எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் எச்சரிக்கையுடன் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வங்கதேச எல்லையில் நியமிக்கப்பட்ட அனைத்து பணியாளா்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து களத் தளபதிகளையும் பணியில் இருக்குமாறும் அனைத்து பணியாளா்களையும் உடனடியாக எல்லைப் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்வதற்காக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் (பொறுப்பு) தல்ஜித் சிங் சௌதரி மற்றும் பிற மூத்த தளபதிகள் கொல்கத்தா வந்துள்ளனா்.
வங்கதேசத்துடன் எல்லையைப் பகிரும் மேற்கு வங்கம் (2,217 கி.மீ.) திரிபுரா (856 கி.மீ.), மேகாலயம் (443 கி.மீ.), அஸ்ஸாம் (262 கி.மீ.) மற்றும் மிஸோரம் (318 கி.மீ.) ஆகிய ஐந்து மாநிலங்களிலும் எல்லைப் பாதுகாப்புப் பணியில் பிஎஸ்எஃப் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.