வங்காளதேசத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்: பின்னணி என்ன? – முழு விவரம்

வங்காளதேசத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 105 பேர் உயிரிழந்தனர்.

டாக்கா,

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த வங்காளதேசம் 1971ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. வங்காளதேச சுதந்திர போராட்டத்தை அவாமி லீக் கட்சி முன்னெடுத்து நடத்தியது. இந்த சுதந்திர போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

நாடு சுதந்திரம் பெற்றபின்னர் வங்காளதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி, தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படு வந்தது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் வங்காளதேசத்தை ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருகே அதிக அளவில் அரசு வேலையில் வாய்ப்பு கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வங்காளதேசத்தில் அரசு வேலையில் தகுதி அடிப்படையில் 44 சதவீதம், தியாகிகளின் குடும்பத்தினர் அடிப்படையில் 30 சதவீதம், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை சேர்தவர்கள் அடிப்படையில் 10 சதவீதம், பெண்களுக்கு 10 சதவீதம், சிறுபான்மையினருக்கு 5 சதவீதம், மாற்று திறனாளிகளுக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

இந்த இடஒதுக்கீட்டு நடைமுறைக்கு எதிராக அந்நாட்டில் கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அரசு வேலையில் தியாகிகள் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை 2018ம் ஆண்டு அந்நாட்டு அரசு ரத்து செய்தது.

இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டாக்கா ஐகோர்ட்டில் 2021ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 1ம் தேதி தீர்ப்பு வெளியானது.

அந்த தீர்ப்பில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மாணவர்கள் போராட்டம் மெல்ல விரிவடைய தொடங்கியது.

இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை போலீசார் தடுக்க முயற்சித்தனர். அப்போது, மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

அதேவேளை, மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து கடந்த 16ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அரசு வேலையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சஸ்பெண்ட் செய்தது. மேலும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கையை ஏற்க மறுத்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடங்கிய போராட்டம் தற்போது ஷேக் ஹசீனா தலைமையிலான வங்காளதேச அரசுக்கு எதிரானதாக மாறியுள்ளது.

வங்காளதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அபார வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் வங்காளதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா 5வது முறையாக பதவியேற்றார். எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் ஷேக் ஹசீனா கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர் மீண்டும் பிரதமரக பதவியேற்றார்.

இதனால், ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு வங்காளதேசத்தில் எதிர்ப்பு நிலவி வந்தது. தற்போது இடஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரானதாக மாறியுள்ளது. இந்த போராட்டத்தை ஒடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ராணுவம் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவ, மாணவியர் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்து வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வங்காளதேசத்தில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், வங்காளதேச பயணத்தை தவிர்க்கும்படி பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

அதேவேளை, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஷேக் ஹசீனா தெரிவித்தார். அவரது பேச்சு டாக்காவின் ராம்புராவை தலைமையிடமாக கொண்ட வங்காளதேச டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து வங்காளதேச டிவி அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அந்த அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். மேலும், நர்சிங்டி பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள், சிறைச்சாலைக்கு தீ வைத்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுதலை செய்தனர். மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் அதை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பதை விரைவில் தெரியவரும்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்