நடுவானில் ராக்கெட் வெடித்து சிதறியதால், வடகொரியாவின் செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சி தோல்வியடைந்தது.
சியோல்,
வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகள், போர் ஒத்திகை போன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தென் கொரியாவை கண்காணிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.
இதனை தொடர்ந்து வரும் 3ம் தேதி 2வது ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவ வடகொரியா திட்டமிட்டு வருவதாக ஜப்பான் சமீபத்தில் கூறி இருந்தது. இந்த சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக இன்று தகவல் வெளியாகி இருந்தது. இதனிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வடகொரியாவின் புதிய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டை, ஏவுவதற்கான முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் முதல் கட்ட ராக்கெட் சோதனையில் நடுவானில் வெடித்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே தென் கொரிய ராணுவம் நாட்டின் வடமேற்கில் உள்ள டோங்சாங்-ரி பகுதியில் இருந்து மஞ்சள் கடல் மீது தெற்கு நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை இரவு 10:44 மணியளவில் தென்பட்டதாக தெரிவித்திருந்தது.
முன்னதாக தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல், ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் சீனப் பிரதமர் லி கியாங் ஆகியோர் சியோலில் முத்தரப்பு உச்சி மாநாட்டை நடத்தி, கொரிய தீபகற்பத்தில் அமைதியை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தநிலையில், வட கொரியாவால் செயற்கைக்கோள் ஏந்திச் செல்லும் ராக்கெட் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.