வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சியோல்,
அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.
இதனிடையே, தென் கொரியாவை கண்காணிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இதனை தொடர்ந்து வரும் 3ம் தேதி 2வது ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவ வடகொரியா திட்டமிட்டுவருவதாக ஜப்பான் சமீபத்தில் கூறியது. ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவது குறித்து வடகொரியா ஜப்பானிடம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.