வந்தவாசி அருகே சாலை விபத்தில் தந்தை, மகள் உட்பட மூவர் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சாலை விபத்தில் தந்தை, மகள் உட்பட மூவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே இன்று (ஆக.16) நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பழைய மும்முனி கிராமத்தில் வசித்தவர் ராஜசேகர் (29). செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பத்மினி (25). இவர்களது மகள்கள் சுபாஷினி (5), மோகனா ஸ்ரீ (4). இந்நிலையில் ராஜசேகர், பத்மினி, சுபாஷினி, மோகனா ஸ்ரீ மற்றும் பத்மினியின் தங்கை பானுமதி (23) ஆகிய 5 பேரும், ஆடி மாதம் ஐந்தாவது வெள்ளிக் கிழமையையொட்டி வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் இன்று (ஆகஸ்ட் 16-ம் தேதி) சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை ராஜசேகர் ஓட்டியுள்ளார். அங்கு, சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் புறவழிச்சாலையில் சென்றபோது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோர தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பத்மினி தங்கை பானுமதி, சிறுமி மோகனா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராஜசேகர், பத்மினி, சுபாஷினி ஆகிய 3 பேரும், வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூவரும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார். தாய் பத்மினி மற்றும் மகள் சுபாஷினிக்கு தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து பொன்னூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்