வன்முறை எதிரொலி; மணிப்பூர் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைப்பு

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இதில், இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதன்பின்னர், பல மாதங்களாக அமைதியான சூழல் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது.

இந்நிலையில், போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இம்பால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, 5 நாட்களுக்கு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மணிப்பூரில் நிலைமை மோசமடைந்துள்ள சூழலில், மணிப்பூர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த பல்கலைக்கழகத்துடன் 2 மருத்துவ கல்லூரிகள் உள்பட 116 கல்லூரிகள் இணைந்துள்ளன. புதிய தேர்வு காலஅட்டவணையை பற்றி அறிந்து கொள்ள manipuruniv.ac.in என்ற வலைதளத்திற்கு சென்று மாணவர்கள் பார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும். மறுதேர்வு தேதிகள் பற்றிய அடுத்த அறிவிப்புகளை அறிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வ பல்கலைக்கழக வலைதளம் உள்ளிட்ட வழிகளை தொடர்ந்து தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!