வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு ஜிப்லைனில் சென்று 35 பேருக்கு சிகிச்சை அளித்த தமிழக நர்ஸுக்கு பாராட்டு

வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு ஜிப்லைனில் சென்று 35 பேருக்கு சிகிச்சை அளித்த தமிழக நர்ஸுக்கு பாராட்டு

உதகை: வயநாட்டில் உயிரையும் பொருட்படுத்தாது, துணிச்சலாக செயல்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்த தமிழக நர்ஸ் சபீனாவின் சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார்.

இயற்கையின் கோரத்தாண்டவத்தால் உருக்குலைந்து போய்க்கிடக்கும் வயநாட்டில், மண்ணுக்குள் புதைந்த உயிர்களை மீட்கும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் அரசோடு கைகோத்துச் செயல்பட்டு வருகின்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் அவர்கள் அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

அப்படி தற்போது வீடியோ மூலம் கவனம் ஈர்த்திருப்பவர்தான் உதகை கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா. வெள்ளம் சீறிப் பாய்ந்து வரும் ஆற்றில், தனது உயிரையும் பொருட்படுத்தாது, தன் கையில் உள்ள மருத்துவ முதலுதவிப் பெட்டியோடு கவனமாக, ஜிப்லைன் மூலம் சென்று, 35 பேருக்கு சிகிச்சையளித்திருக்கிறார் சபீனா.

கேரளத்தின் சூரல்மலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், எதிர்த் திசையில் உள்ள நிலப்பகுதியில் சுமார் 35 மக்கள் காயங்களுடன் சிக்கிக் கொண்டனர். இதனால் வெள்ளத்தைக் கடந்து சென்று மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆற்றைக் கடக்க ஜிப்லைன் அமைத்து எதிர்த் திசைக்குச் சென்றனர்.

அப்படியும் அங்குச் சிக்கியிருந்தவர்களை அப்படியே இக்கரைக்கு அழைத்து வர இயலவில்லை. அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை தேவைப்பட்டது. எனவே, இங்கிருந்து அக்கரைக்கு ஜிப்லைனில் சென்று சிகிச்சை அளிக்க ஆண் நர்ஸ்களை மீட்புக்குழுவினர் தேடினர். ஆனால், அப்போதைக்கு அங்கு ஆண்கள் யாரும் இல்லை. அதனால் கூடலூரைச் சேர்ந்த நர்ஸ் சபீனா, தானே ஜிப்லைனில் அக்கரைக்குச் செல்வதாக மீட்புக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

எப்படி ஒரு பெண்ணை ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு அனுப்புவது என முதலில் மீட்புக்குழுவினர் தயங்கியுள்ளனர். ஆனால், சபீனாவின் துணிச்சல் மற்றும் தைரியமான பேச்சால் நம்பிக்கை ஏற்பட்டு அவரை கயிறு மூலம் அக்கரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தைரியமாக அக்கரைக்குச் சென்ற சபீனா, அங்கிருந்த மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்திருக்கிறார்.

மழையில் நனைந்துவிடாதபடி ரெயின்கோட் அணிவிக்கப்பட்டு, கையில் மருத்துவப் பெட்டியைப் பிடித்துக் கொண்டு, காலுக்கடியில் சீறிப் பாய்ந்து வரும் வெள்ளத்தைப் பொருட்படுத்தாது, சபீனா ஜிப்லைனில் செல்லும் வீடியோ காட்சிகள் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சபீனாவின் செயலை பாராட்டி, இன்று உதகை வந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவருக்குப் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும், அரசு சார்பில் அவரது செயலை அங்கீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அப்போது பேசிய சபீனா, “ஆண் நர்ஸ்தான் வேண்டும் என மீட்புக் குழுவினர் தேடினர். ஆனால் யாரும் கிடைக்காத சூழ்நிலையில், நான் அக்கரைக்குச் செல்லத் தயாராக இருப்பதாகக் கூறினேன். முதலில் தயங்கினாலும் பிறகு சம்மதித்தனர். அக்கரையில் உள்ளவர்களும் பெண்ணை ஏன் அனுப்புகிறீர்கள் எனத் தயங்கினார்கள். ஆனால், நான் அக்கரைக்குச் சென்று அங்குப் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இங்கிருந்து பார்க்கும்போதே அங்கு காயமடைந்தவர்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்பது தெரிந்தது. எனவே, எவ்வளவு விரைவாக அங்கு செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாகச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருந்தது. அந்த வெள்ளமோ, அங்கிருந்த சூழ்நிலையோ எனக்குப் பயமாக இல்லை. ஜிப்லைனில் செல்லும்போது, காலுக்கடியில் ஓடிய வெள்ளத்தைப் பார்க்கும்போது, கையில் வைத்திருக்கும் மருந்துப் பெட்டி கீழே விழுந்து விடுமோ என்றுதான் பயமாக இருந்தது. மற்றபடி எந்தப் பயமும் எனக்கு ஏற்படவில்லை.

முதலில் ஜிப்லைன் மூலம் நான் மட்டும் சென்றேன். பிறகு எங்களது சார் வந்தார். அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு மருத்துவ ஊழியர்கள் வந்தனர். அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். அவர்களில் பலர் காயத்தின் வலிகூட தெரியாத அளவுக்கு அதிர்ச்சியிலிருந்தனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை நாங்கள் செய்தோம்.” என்றார்.

உயிரையும் பொருட்படுத்தாது, துணிச்சலாகச் செயல்பட்டு, காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த சபீனாவின் மருத்துவ சேவைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்