வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணியில் ராணுவத்துடன் கைக்கோர்த்த இஸ்ரோ

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 29-ம் தேதி இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக 30-ம் தேதி நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 வரை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழை, நிலச்சரிவுடன் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன. இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 4-வது நாளாக மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதியில் ராணுவத்துடன் இணைந்து இஸ்ரோ மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மண்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை ரிசாட் சார் (RISAT SAR) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களை இஸ்ரோ வழங்கி உள்ளது.

இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு பாதிப்பு குறித்து விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்ய கேரள அரசு தலைமைச் செயலாளர் நேற்று தடை விதித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு