வயநாடு: பிரியங்கா காந்திக்கு எதிராகப் போட்டியிடும் இந்திய கம்யூ. கட்சி வேட்பாளர் யார்?

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோகேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து விதிகளின்படி, ஒரு தொகுதியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற நிலையில் வட மாநிலங்களில் கட்சியினை மேம்படுத்தும் நோக்கில் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகத் தொடர்ந்தார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் நவ. 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

நாட்டில் மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் 'இந்தியா கூட்டணி' என்ற பெயரில் ஒன்றிணைந்து கடந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெற்றன.

ஆனால், கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாகவே போட்டியிட்டன. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்டிஎப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி(யூடிஎஃப்) என இரு கூட்டணிகளாக உள்ளன.

எனவே, வயநாடு இடைத்தேர்தலிலும் ஐக்கிய முன்னணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக தோ்தலில் முதன்முறையாக பிரியங்கா காந்தி களமிறங்கியிருக்கிறார்.

இடது ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1987 முதல் 2001 வரை நந்தபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர். 2014 மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷாநவாஸிடம் போட்டியிட்டு 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

கடந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட ராகுல் காந்தி 3.64 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வயநாடு தொகுதிக்கு பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

கேரளத்தில் பாலக்காடு, செலக்கரா ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவ. 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது