வரதட்சிணை கொடுமை: 29 ஆண்டுகளுக்குப் பிறகு கைதான 65 வயது மூதாட்டி!

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணை கொடுமை வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு 65 வயதான மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

வரதட்சிணை வழக்கில் தலைமறவாக இருந்த பெண், 29 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கத்தெளலி பகுதியைச் சேர்ந்த ராஹீசு என்பவரின் மனைவி வரைசா மீது அவரின் மருமகள், 1995ஆம் ஆண்டு வரதட்சிணை புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அப்பெண்ணின் வரைசா, கணவர் ராஹீசு, சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று மாமியாரை காவல் துறையினர் கைது செய்தனர். அவருக்கு தற்போது 65 வயதாகிறது.

இது தொடர்பாக பேசிய காவல் துறை கண்காணிப்பாளர் சத்ய நரேன் பிரஜாபத், ராஹீசு என்பவரின் மனைவி வரைசா மீது, அவரின் மருமகள் 1995ஆம் ஆண்டு வரதட்சிணை புகார் அளித்தார். இதன் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

வரைசா தலைமறைவான நிலையில், அவரைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டது.

தேடுதல் பணிகள் தொடர்ந்துவந்த நிலையில், அண்டை மாவட்டமான பாக்பத்தில் உள்ள பாரெளட் பகுதியில் வரைசா கண்டறியப்பட்டார். அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!