வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
சென்னை,
நாடு முழுவதும்18-வது மக்களவைக்கான தேர்தல் மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில் வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-ம் கட்ட தேர்தல் நடக்கிறது.
அதன் தொடர்ச்சியாக 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது. எனவே வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தற்போது தீவிரமாக செய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அரசிதழ் வெளியிட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 5 – 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக இருந்து பணிகளை மேற்கொள்வது இவர்களின் முதன்மையான பணி என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.