சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை காலை 10.10 மணிக்கு வானில் அடையாளம் தெரியாத மூன்று பொருட்கள் பறந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வானில் பறந்து கொண்டிருந்த பொருட்கள் டிரோன்களாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும், தரை இறங்குவதற்கும் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து 12.45 மணி வரை அந்த அடையாளம் தெரியாத பொருட்கள் வானில் பறந்தபடி இருந்தன. இதன் காரணமாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு, விமான கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அங்கு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானில் பறந்த மர்ம பொருட்கள் டிரோன்களா? அல்லது வேறு எதுவுமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவை டிரோன்களாக இருக்கும் பட்சத்தில், அவற்றை இயக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.