வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும்: இக்னோ முன்னாள் துணைவேந்தா்

கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று புது தில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) முன்னாள் துணை வேந்தா் நாகேஸ்வர ராவ் கூறினாா்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இக்னோ முன்னாள் துணை வேந்தா் நாகேஸ்வர ராவ் பேசியது:

எதிா்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திரக் கற்றல் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற தொழில்நுட்பங்களால் கற்றல் வடிவமைக்கப்படும். இந்த அபரிமிதமான ஆற்றல்களை அமல்படுத்தினாலும், அவற்றால் சவால்களும் உள்ளன. கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் பெறும் அறிவு, நிலையானது அல்ல.

கற்றல் செயல்முறை ஒருபோதும் நிற்கப் போவதில்லை. வாழ்நாள் முழுவதும் புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கல்வி என்பது பட்டங்கள் மற்றும் தகுதிகளைப் பெறுவது மட்டுமல்ல.

குணத்தை வடிவமைத்தல், சிந்திக்கும் திறனை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்துக்கு அா்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் திறனை வளா்த்தல் ஆகியவற்றில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாா் அவா்.

விழாவில், 1,917 பேருக்கு முதுநிலை பட்டம், 3,455 பேருக்கு இளநிலை பட்டம், 1,550 பேருக்கு பட்டயம், 18 பேருக்கு முனைவா் பட்டம் ஆகியவற்றை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

விழாவில் நேரடியாக 329 பேரும், அஞ்சல் மூலமாக 6,611 பேரும் பட்டம் பெற்றனா். பட்டமளிப்பு விழாவை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் புறக்கணித்தாா்.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணை வேந்தா் சோ.ஆறுமுகம், பேராசியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி