வங்கதேச பத்திரிகையாளர் ஒருவர் டாக்கா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வங்கத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்ததில் அவர் நாட்டை விட்டே வெளியேறினார். தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ளது. எனினும் அங்கு பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்நிலையில் வங்கதேசத்தில் ஜி-டிவி செய்தி ஆசிரியர் சாரா ரஹனுமா(32) மரணமடைந்துள்ளார். டாக்காவின் ஹதிர்ஜீல் ஏரியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சாராவின் உடலை சாகர் என்பவர் கண்டறிந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சாரா இறந்துவிட்டதாகக் கூறினர்.
சாரா நேற்று தன் முகநூல் பக்கத்தில் சில பதிவுகளை இட்டுள்ளார்.
'வாழ்வதைவிட சாவதே மேல்' என்று ஒரு பதிவில் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், 'உன்னைப் போன்ற ஒரு நண்பர் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பாராக. உன் கனவுகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். நாம் ஒன்றாக நிறைய வேலைகளைத் திட்டமிட்டோம் என்பது எனக்குத் தெரியும். மன்னிக்கவும், அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. உன் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்' என்று கூறி தன் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவரது முகநூல் பக்க புகைப்படம் 'விடைபெறும் நேரம் வந்துவிட்டது' (Time to say goodbye) என்று உள்ளது.
அவருடைய பதிவுகளும் அங்குள்ள நிலைமையும் வங்கதேசத்தில் சற்று பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜீத் இதுகுறித்து, 'டாக்கா நகரில் உள்ள ஹதிர்ஜீல் ஏரியில் இருந்து சாரா ரஹமுனாவின் உடல் மீட்கப்பட்டது. வங்கதேசத்தில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான மற்றொரு கொடூரமான தாக்குதல் இது.
காஸி டிவி, சமீபத்தில் கைது செய்யப்பட்ட கோலம் தஸ்தகீர் காஸிக்குச் சொந்தமான மதச்சார்பற்ற செய்தி நிறுவனம்' என்று பதிவிட்டுள்ளார்.