விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவுவிக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை (ஜூலை 8) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவின் நா. புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனுதாக்கலும், 24-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இத்தொகுதியில் திமுகவின் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னரே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் 30-க்கும் மேற்பட்டோர், 80 -க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், பல்வேறு மாநகராட்சி மேயர்கள், நகர்மன்றத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றியச் செயலர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்குள்பட்ட பகுதிகளுக்குச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாள்தோறும் காலையிலும், மாலையிலும் மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்குகளை கேட்டது மட்டுமல்லாமல், பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பல்வேறு அமைச்சர்களுடன் கட்சியின் இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று, வாக்குகளை சேகரித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று வாக்குகளை சேகரித்தனர். கடந்த 10 நாள்களுக்கு மேலாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கிராமங்களுக்கு சென்று தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுகவினரை போன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், வன்னியர் சங்கத்தினர், வழக்குரைஞர்கள் சமூகநீதிப் பேரவையினர் உள்ளிட்டோரும் விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் பொ. அபிநயாவுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இதைத் தவிர இதர கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர்.

பிரசாரம் நிறைவு: தொடர்ந்து 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. விக்கிரவாண்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற பிரசார நிகழ்வில் திமுக இளைஞரணிச் செயலரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து, தொகுதியில் பிரசாரம் செய்த வெளிமாவட்டத்தினர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்