“விசிகவின் மது ஒழிப்பு மாநாடு ஓர் அப்பட்டமான நேர்மையற்ற அரசியல்” – பாஜக விமர்சனம்

“விசிகவின் மது ஒழிப்பு மாநாடு ஓர் அப்பட்டமான நேர்மையற்ற அரசியல்” – பாஜக விமர்சனம்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு என்பது அப்பட்டமான நேர்மையற்ற அரசியல் என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி, கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப் போவதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் கடந்த 10-ம் தேதி அறிவித்த திருமாவளவன், இந்த மாநாடு அரசியலுக்கு, தேர்தல் கூட்டணிக்கு அப்பாற்பட்டது என்றார். அதிமுக உள்பட எந்த ஒரு அரசியல் கட்சியும் அமைப்புகளும் பொதுநல நோக்கோடு இதில் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார். ஆனால், உடனேயே, பாஜக மற்றும் பாமகவுக்கு இதில் இடமில்லை என்றார். அப்போதே, இது அப்பட்டமான நேர்மையற்ற அரசியல் என்பது அம்பலாகிவிட்டது.

மாநாட்டுக்கு கள்ளக்குறிச்சியைத் தேர்வு செய்தது, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது ஆகியவற்றின் மூலம் திமுகவுக்கு எதிரான திருமாவளவனின் காய் நகர்த்தல் முயற்சி இது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அடுத்ததாக, கடந்த 12-ம் தேதி கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தார். இது திமுகவுக்கு எதிரான திருமாவளவனின் அடுத்த காய் நகர்த்தலாக இருந்தது. இந்த கருத்துக்குப் பிறகு திமுகவினர் பலர் சமூக ஊடகங்களில் திருமாவளவனுக்கு எதிராக 'பொங்கி எழுந்ததை' நாம் அறிவோம். திமுகவினர் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்பது திருமாவளவனுக்கும் தெரியும். தெரிந்தே செய்தவர் திருமாவளவன்.

சிங்கம்போல் சிலிர்த்தெழுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ஆடு மீண்டும் அதன் பட்டிக்கே திரும்புவதுபோல் நிலைமை முடிந்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று (செப்.16) தனது குழுவினரோடும், பின்னர் தனியாகவும் சந்தித்த திருமாவளவன் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு நேரில் 'வாழ்த்து' தெரிவித்ததாகக் கூறினார்.

அடுத்ததாக, தேசிய மதுவிலக்குக் கொள்கை ஒன்றை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அதற்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் மனு ஒன்றை முதல்வரிடம் கொடுத்ததாகக் கூறினார். அந்த மனுவின் பொருளே, 'தேசிய மதுவிலக்குக் கொள்கை – ஒன்றிய அரசை வலியுறுத்துதல் தொடர்பாக' என்றுதான் இருக்கிறது. திருமாவளவன் அளித்த இந்த மனுவும், ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகான அவரது பேட்டியும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்த்திவிட்டது. அது, விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு என்பது மது ஒழிப்புக்கானது அல்ல; அரசியலுக்கானது என்பதே அது.

இதில் மோசமான நகைச்சுவை என்னவென்றால், இந்த மாநாட்டில் ஆளும் கட்சியான திமுக கலந்து கொள்கிறது என்பதுதான். திமுக கலந்து கொள்கிறது என்பதால் அதிமுக கலந்து கொள்ளாது என்ற புரிதல் தனக்கு இருப்பதையும் திருமாவளவன் நேற்று வெளிப்படுத்திவிட்டார். இந்த மாநாடு மது ஒழிப்புக்கானது என்றும், அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் நீட்டி முழக்கி முன்பு பேட்டி அளித்த திருமாவளவன், சொன்னதைச் செய்வதற்கான ஆற்றலும், நேர்மையும் தன்னிடம் இல்லை என்பதை அனைவருக்கும் புரிய வைத்துவிட்டார். தான் நடத்தும் மாநாட்டின் நோக்கத்தை தானே சிதைத்த பெருமை திருமாவளனுக்கே உண்டு. இனி அந்த மாநாட்டுக்கு எந்த மரியாதையும் இருக்கப் போவதில்லை" என தெரிவித்துள்ளார்.

Related posts

அர்ச்சகர்களை கருவறையில் அனுமதிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கடலூர் மாவட்ட பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்