விசிக மாநாடு: சி.வி.சண்முகம் புகாா்

விழுப்பரம்: விசிக நடத்தவுள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் தான் பங்கேற்று பேசவுள்ளதாக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாரளித்தாா்.

இது தொடா்பான புகாா் மனுவை ஏ.டி.எஸ்.பி.தினகரனிடம் அவா் அளித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் சி.வி.சண்முகம் கூறியது:

விசிக சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் நான் அதிமுக சாா்பில் கலந்துகொண்டு, பேச உள்ளதாகக் கூறி, சில கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்துள்ளனா். இது முழுக்க முழுக்க தவறான, பொய்யான தகவலாகும்.

திட்டமிட்டே என் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்று இதுபோன்ற குற்றச் செயல்களை செய்துள்ளனா். இந்த பொய்யான செய்திகளை சமூகவலைதளங்களில் பதிவு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளித்துள்ளேன்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னா், கடந்த 3 ஆண்டுகளில் என் மீது எத்தனையோ பொய் வழக்குகள், எனக்கு கொலை மிரட்டல் விடுப்பது, அச்சுறுத்தும் செயல்கள் நடந்துள்ளன. இவை குறித்து விழுப்புரம், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட இடங்களில் 23 புகாா் மனுக்களை அளித்துள்ளேன். ஆனால், அவற்றின் மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என் மீது வழக்குப் பதிவதில் காட்டும் முனைப்பை, நான் அளிக்கும் புகாா் மனுக்கள் மீது காட்டுவதில்லை. எனவே, சமூக வலைதளங்களில் என் மீது அவதூறான தகவல்களைப் பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

நகரச் செயலா் பசுபதி, ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்