விஜய்யின் தவேக கட்சிக் கொடி அறிமுகம்: அமைச்சர் துரைமுருகன் கருத்து 

விஜய்யின் தவேக கட்சிக் கொடி அறிமுகம்: அமைச்சர் துரைமுருகன் கருத்து

வாலாஜா: “இது ஜனநாயக நாடு. இங்கு அனைவரும் கட்சி தொடங்கலாம். கொடியை அறிமுகப்படுத்தலாம். அந்தக் கொடியை ஏற்றி வைக்கலாம்” என நடிகர் விஜய் அரசியல் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குறித்து கருத்து தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட முகுந்தராயபுரம் ஊராட்சியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியது: ''தமிழகத்தில் பெண்களுக்கு நல்ல பல திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தை கூறலாம். இந்த திட்டங்களுக்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் 'தமிழ் புதல்வன்' என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் தான் எனக்கு மிகவும் பிடித்த திட்டமாகும். இதை நானே முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். இந்த திட்டத்தை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

இதையடுத்து, விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ''கடந்த 10 ஆண்டுகளை விட தமிழகத்தில் கடநத 3 ஆண்டு காலமாக சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கென பல நல்ல திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். இது திமுக ஆட்சி இல்லை, மக்களின் ஆட்சி'' என்றார்.

விஜய் கட்சிகொடி குறித்து: இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியது, ”கலைஞர் நாணயம் வெளியிட்டது எங்களுக்கும் பெருமையாக இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததில் அரசியல் உள்நோக்கம் இருப்பாக அதிமுக கூறுகிறது. அவர்களுக்கு என்ன தெரியுமோ அதை அவர்கள் சொல்கிறார்கள்” என்றார்.

திரைப்பட நடிகர் விஜய் தனது கட்சி கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்தது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பியபோது, ''இது ஜனநாயகம் நாடு. இந்த நாட்டில் அனைவருக்கும் கட்சி தொடங்கவும், கொடியை அறிமுகப்படுத்தவும், அந்தக் கொடியை ஏற்றவும் உரிமை உண்டு'' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ''தமிழகத்தில் நீர்வளத் துறையில் எந்த விதமான வளர்ச்சியும் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருப்பதாக கூறுகிறார்கள். நீர்வளத் துறையை பற்றி அன்புமணிக்கு முழுமையாக தெரியாது. தமிழகத்தில் அணை கட்ட இடம் இல்லை. அனைத்து இடங்களிலும் அணை கட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 48 அணைகள் கட்டியுள்ளோம். அதேபோல, காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்'' என்று அவர் கூறினார்.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்