“விஜய் மீது திமுகவுக்கு ஏன் அவ்வளவு பயம்?” – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

“விஜய் மீது திமுகவுக்கு ஏன் அவ்வளவு பயம்?” – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

சென்னை: “மாநாட்டுக்கு இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்து விடுவார் என்பதால் நடிகர் விஜய்யை பார்த்து திமுக அஞ்சுகிறது” என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (புதன்கிழமை) சந்தித்தார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்தித்தேன். முன்னாள் ஆளுநர் என்ற அடிப்படையில் சில கருத்துகளை அவரிடம் பரிமாறிக் கொண்டேன். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பு, தமிழகத்தில் புதிதாக எந்த நிறுவனமும் தொடங்கப்படவில்லை. யாருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை.

தற்போது வெளிநாடு சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது, சைக்கிள் ஓட்டுவதையே பணியாக கொண்டிருக்கிறாரே தவிர, பெரிதாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு இப்போது ஓரளவுக்கு முதலீடுகள் வருவதற்கு காரணம், பிரதமர் மோடி மீதான நல்லெண்ணத்தில் தான். பிரதமர் மோடியை பற்றி எதையெல்லாம் எதிர்த்துப் பேசினார்களோ, இப்போது அதையெல்லாம் திமுக அரசு நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாததற்கு மத்திய அரசு தான் காரணம் என தவறான கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

பள்ளிக் கல்வித் துறைக்கான 90 சதவீதம் நிதியை மத்திய அரசு கொடுத்துவிட்டது. பிஎம்ஸ்ரீ திட்டத்தை முந்தைய தலைமை செயலாளர் நடைமுறைப்படுத்துவதாக கூறி அதற்கான நிதியை வழங்குங்கள் என்றார். ஆனால் தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க தவறு செய்தது திமுக தான். கார் பந்தயத்தைக் கூட சுலபமாக திமுக அரசால் நடத்த முடிகிறது.

ஆனால், மாநாடு நடத்தவிட முடியாமல் விஜய் கட்சியை திமுக அரசு முடக்குகிறது. மாநாடு நடத்த இடம் கொடுப்பதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சினை? இதற்காக நான் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறேன் என்பது கிடையாது. நடிகர் விஜய் பாவம். ஒவ்வொரு முறையும் மாநாட்டுக்கான இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். விஜய் மீது ஏன் திமுகவுக்கு அவ்வளவு பயம்? மாநாடு நடத்த இடத்தை கொடுத்தால், மடத்தை பிடித்து விடுவார் என திமுக பயப்படுகிறது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்திய போது பெண்களை கைது செய்தார்கள். 2026 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால், எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது, முடக்கி விட வேண்டும் என திமுக நினைக்கிறது. டாஸ்மாக், காவிரி என எந்த பிரச்சினைக்கும் வாய் திறக்காமல், தமிழகத்தில் மிக மோசமான அரசு நடந்து கொண்டிருக்கிறது. நமது உரிமையை மற்ற மாநிலங்களிடம் தமிழகம் இழந்து கொண்டிருக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள் பிரெஞ்சு மொழி படிக்க வேண்டும் என்று தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுகிறது. ஆனால், நம் நாட்டில் உள்ள இன்னொரு மொழியை படிக்கவிடாமல், அரசுப் பள்ளி மாணவர்களை துன்பத்துக்குள்ளாக்கி, அவர்களின் வாழ்க்கையை திமுக நசுக்குகிறது. எல்லாத்துறையிலும் பாலியல் கொடுமைகள் நடக்கிறது. திரைத்துறையில் அது அதிகமாக இருக்கிறது. அரசியல் இன்னும் ஆண் சமுதாய ஆதிக்கமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

அரசியலில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதை தங்களை போன்றவர்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். தாங்கள் தான் மற்றவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால் தான் ஸ்டாலின், தன்னுடைய பாதுகாப்பையும், பிரேமலதா பாதுகாப்பையும் எடுத்துவிட்டார். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. ஒரு டிஎஸ்பி தலைமுடியை பிடித்து இழுக்கிறார்கள் என்றால், அரசியலில் உள்ளவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க போகிறது?” என்று தமிழிசை கூறினார்.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி