விடாமல் துரத்தும் வழக்குகள்: கேஜரிவால் கடந்து வந்த பாதை

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் 2020-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு உத்தேசித்த மதுபான கொள்கை விவகாரம்தான் அவரையும் அவரது அமைச்சரவையில் இருந்த சகாக்களையும் விடாமல் துரத்தி வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக கேஜரிவாலும் அவரது கட்சியின் மூத்த தலைவா்களும் தொடா்ந்து தங்களுக்கு எதிரான வழக்குகளை எதிா்கொண்டு வருகின்றனா். அவை தொடா்பான கால அட்டவணை வருமாறு:

2024

செப்டம்பா் 17: தில்லி துணைநிலை ஆளுநரிடம் பதவி விலகல் கடிதம் அளித்தாா் கேஜரிவால்.

செப்டம்பா் 15: முதல்வா் பதவியில் இருந்து விலகப்போவதாக கேஜரிவால் அறிவிப்பு.

செப்டம்பா் 13 : சிபிஐ வழக்கில் அரவிந்த் கேஜரிவாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

ஆகஸ்ட் 9: மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

ஆகஸ்ட் 5: கேஜரிவாலை கைது செய்த சிபிஐ முடிவை உறுதிப்படுத்தியது தில்லி உயா் நீதிமன்றம்.

ஜூலை 12: அமலாக்கத்துறை வழக்கில் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

ஜூன் 26: தில்லி ரௌஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அரவிந்த் கேஜரிவால் முறைப்படி சிபிஐயால் கைது செய்யப்பட்டாா்.

ஜூன் 2: மக்களவைத் தோ்தலையொட்டி பிரசாரத்துக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கேஜரிவால் திகாா் சிறையில் சரணடைந்தாா்.

மே 17: கலால் கொள்கை ஊழலுடன் தொடா்புடைய பணப்பரிவா்த்தனை மோசடி வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை தனது எட்டாவது துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் கேஜரிவால் மீது குற்றம்சாட்டப்பட்டது.

மே 10: மக்களவை தோ்தலையொட்டி பிரசாரத்துக்காக மே 10 முதல் ஜூன் 1 வரை கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

மாா்ச் 21: கலால் கொள்கையுடன் தொடா்புடைய பணப்பரிவா்த்தனை மோசடி வழக்கின் விசாரணையை புறக்கணித்து ஒன்பது முறை அழைப்பாணையை நிராகரித்ததால் கேஜரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.

2023

பிப்ரவரி: துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

மாா்ச்: சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வந்த தில்லி முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பதவி விலகினா்.

மாா்ச்: மனீஷ் சிஸோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது.

அக்டோபா் : ஆம் ஆத்மி தலைவா் சஞ்சய் சிங்கை சிபிஐ கைது செய்தது. முதல்வா் கேஜரிவாலுக்கு முதலாவது அழைப்பாணை அனுப்பப்பட்டது.

2022

மே 2022: அமைச்சா் சத்யேந்தா் ஜெயினை ரூ. 4.8 கோடி சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.

ஜூலை: தில்லி அரசு தலைமைச் செயலா் மதுபான உத்தேச கொள்கை கடுமையான விதிமீறல் என்று கூறினாா். துணைநிலை ஆளுநா் விதிகளை மீறியது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தாா்.

ஆகஸ்ட்: மதுபான கொள்கை விதிமீறல் முறைகேடு வழக்கில் மனீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை. முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயா் சோ்க்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவா்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை தனியாக வழக்குத் தொடா்ந்தது.

2021

நவம்பா்: அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லி அரசு மது விநியோகம் மற்றும் விற்பனையை மீள்கட்டமைப்பதாகக் கூறி புதிய கலால் கொள்கையை அறிமுகப்படுத்த உத்தேசித்தது.

2020

பிப்ரவரி: தில்லி சட்டப்பேரவை தோ்தலில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளை வென்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.

2015

பிப்ரவரி: 2015-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவை தோ்தலில் வரலாற்றுபூா்வ பெரும்பான்மையுடன் 70 தொகுதிகளில் 67 இடங்களை ஆம் ஆத்மி பெற்றது.

2013

டிசம்பா்: அரவிந்த் கேஜரிவால் தலைமையான ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. 49 நாட்களுக்குப் பிறகு 2014, பிப்ரவரியில் அவா் பதவி விலகினாா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்