‘விடியா ஆட்சியை வீழ்த்த விக்கிரவாண்டி வாருங்கள்’ – மதுரையில் தவெக போஸ்டர் சலசலப்பு

‘விடியா ஆட்சியை வீழ்த்த விக்கிரவாண்டி வாருங்கள்’ – மதுரையில் தவெக போஸ்டர் சலசலப்பு

மதுரை: ‘விடியா ஆட்சியை வீழ்த்த விக்கிரவாண்டிக்கு வாருங்கள்’ என ஆளுங்கட்சியை சீண்டும் விதமாக மதுரையில் விஜய்யின் தவெக கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்த நிலையில், நாளை மறுதினம் (அக்.27) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை விஜய் நடத்துகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், போஸ்டர்கள் ஒட்டியும் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஏற்கெனவே, கட்சி தலைவர் விஜய் விடுத்த அறிக்கையில், ‘நமது கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைப்போம். மற்ற கட்சிகளின் செயல்பாடு குறித்து பேசத் தேவையில்லை’ எனக் கூறியிருந்தார். இருப்பினும், ஆளும் கட்சியை விமர்சிக்கும் விதமாக ‘விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டி வாருங்கள், மன்னர் ஆட்சிக்கு முடிவு, தளபதியால் மக்களாட்சிக்கு விடிவு’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் மதுரை தெற்குமாவட்ட தொண்டரணி சார்பில் மதுரைக்குள் ஒட்டப்பட்டுள்ளன.

இப்போதும் எங்கள் முதல்வர் நடிகர் விஜய் தான் என்பதை சொல்லும் வகையில் ஆங்கில வாசகங்கள் கொண்ட போஸ்டர்களையும் தவெகவினர் ஒட்டியுள்ளனர்.
மாநாடு தொடங்கும் முன்பே கட்சியின் தலைவரின் அறிக்கைக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தினர் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் விஜயன்பன் கூறுகையில், “மதுரையில் கடந்த வாரம் முதலே அழைப்பிதழ் வழங்கியும், போஸ்டர்களை ஒட்டியும் மக்களை மாநாட்டுக்கு அழைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. மாநாட்டு பணியில் விக்கிரவாண்டியில் இருந்தாலும், மதுரையில் இருந்து ஏராளமான வாகனங்களில் கட்சியினரை மாநாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடும் தீவிரமாக நடக்கிறது” என்றார்.

Related posts

வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களுக்கு நீதித் துறை மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது: நீதிபதி சி.டி.ரவிகுமார்

தீபாவளியின்போது நெரிசல் ஏற்பட்டால் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்யலாம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகளில் நாளை முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை