விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சந்திரயான்-4, ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விண்வெளித் திட்டங்களுக்கு மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ள சந்திரயான்-3 திட்டத்தை தொடர்ந்து, அடுத்த முயற்சியாக, சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிலவுக்கு சென்று ஆய்வு செய்வதுடன், நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமிக்கு திரும்புவதை சந்திரயான்-4 திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. சந்திரயான்-4 திட்டத்துக்கு ரூ. 2,104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்துக்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக ரூ. 11,170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ககன்யான் திட்டத்துக்காக மொத்தம் ரூ. 20,193 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2028-இல், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மைல்கல்லாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி பணிகளுக்காக ‘பாரதிய அந்தரிக்‌ஷ் நிலையம்(பிஏஎஸ்)’ என்ற பெயரில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட உள்ளது. இத்திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், குறைந்த செலவிலான ‘என்ஜிஎல்வி’ என்றழைக்கப்படும் அடுத்த தலைமுறைக்கான விண்கலத்தை வடிவமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கட்டமைப்பிலும், 2040-இல் இந்திய குழுவினர் நிலவில் தரையிறங்கும் திட்டத்துக்கும் முக்கிய பங்களிப்பை ‘என்ஜிஎல்வி’ அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் விண்வெளித் திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்(விஓஎம்) என்ற பெயரில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், வெள்ளி கிரகத்தில் சுற்றுச்சுழல், வளி மண்டலம், நிலப்பரப்பு ஆகியவை குறித்து தெளிவான புரிதல்களை வழங்க வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!