விமானப்படை சாகசம் நிறைவு: ரயில்களில் அலைமோதிய கூட்டம்!

சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரீனாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி, இதைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரீனாவில் திரண்டிருந்தனர்.

விமானப்படையின் சாகச நிகழ்ச்சியையொட்டி வணிக வாகனங்கள், காமராஜா் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆா்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் செல்ல காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விமானப் படையின் ரஃபேல், மிக்-29, தேஜஸ், டகோட்டா, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், ஜாகுவார், சுகோய், சராங் குழு, சூர்ய கிரண் விமானக் குழு, ஆகாஷ் கங்கா குழு, சேதக் உள்பட 20க்கும் மேற்பட்ட விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சாகசத்தில் ஈடுபட்டு பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தன. காலை 11 மணியளவில் தொடங்கிய வான் சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நீடித்தது.

இந்நிலையில், மெரீனாவில் வாகன நெரிசலைத் தவிா்க்க மக்கள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சியை கண்டு ரசித்தபின் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல ஒரே நேரத்தில் புறப்பட்டதால் பேருந்துகளிலும் புறநகர் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, வேளச்சேரி மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்ததாக மக்கள் புலம்புவதையும் காண முடிந்தது.

போதிய ரயில்கள் இயக்கப்படாததால் வேளச்சேரி ரயில் நிலையத்திலும் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததைக் காண முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி குறைவான ரயில்களே இயக்கப்படுவதால் புறநகர் ரயில் நிலையங்களில் நிகழ்ச்சியை கண்டுரசிக்கச் சென்றிருந்த மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, பயணிகளின் வசதிக்காக கூடுதலாக பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், ஏராளமானோர் தங்கள் சொந்த வாகனங்களில் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்துவிட்டு திரும்பிவரும் நிலையில், மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!