விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவன்!

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவன்!சிறுவனைத் தேடி கண்டறிந்த பிறகே, பெற்றோருக்கும் இது தொடர்பாக தெரியவந்துள்ளது. கோப்புப் படம்

தில்லி விமான நிலையத்துக்கு 13 வயது சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் சிறுவனை கைது செய்தனர்.

விமான நிலையத்துக்கு சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த சில நாள்களுக்கு முன்பு தில்லி – டொரண்டே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விசாரணையில் அந்த மின்னஞ்சல் போலி என்றும் அதனை அனுப்பியது பள்ளி சிறுவன் எனவும் தெரியவந்தது.

தற்போது உத்தரகண்ட்டைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர், தில்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தில்லி துணை ஆணையர் உஷா ரங்னானி, கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வந்த செய்தியைப் படித்து, ஆர்வமிகுதி காரணமாக 13 வயது சிறுவனும் தில்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு உள்ளதாக போலி மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

தில்லி வரும் துபை விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, சிறுவன் அந்த மின்னஞ்சல் ஐடியை முற்றிலுமாக அழித்துள்ளார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவனை கண்டறிந்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.

படிப்பதற்காக பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுத்ததாகவும், அதில் இருந்து மின்னஞ்சலை அனுப்பியதாகவும் விசாரணையில் சிறுவன் தெரிவித்துள்ளார். பயத்தின் காரணமாக போலி மின்னஞ்சல் அனுப்பியதை பெற்றோரிடமிருந்து சிறுவன் மறைத்துள்ளார்.

காவல் துறையினர் சிறுவனைத் தேடி கண்டறிந்த பிறகே, அவரின் பெற்றோருக்கும் இது தொடர்பாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவன் விசாரணைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக உஷா தெரிவித்தார்.

கல்வி நிலையங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் விமான நிலையங்களில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன. அவை பெரும்பாலும் போலியானவை என விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Russia fines Google $20,000,000,000,000,000,000,000,000,000,000,000

Actor Rajinikanth, 73, has been admitted to Apollo Hospitals

Value of gold bar hits $1 million for the first time ever