விம்கோ நகர் – வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: மெட்ரோ ரயில் சேவை 1 மணி நேரம் பாதிப்பு
சென்னை: விம்கோ நகர் – விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், விம்கோநகர் – வண்ணாரப்பேட்டை இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் வரை மெட்ரோ ரயில் சேவை இன்று (ஆக.8) பாதிக்கப்பட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் பயணிக்க வந்த பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
சென்னையில் விம்கோ நகர் – விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் – பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். விரைவான, பாதுகாப்பான, வசதியான பயணம் என்பதால், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில், விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்தில், விம்கோ நகர் – வண்ணாரப்பேட்டை இடையே இன்று காலை சுமார் 10 மணி அளவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தடைப்பட்டது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், அங்கு அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், காலையில் மெட்ரோ ரயில் மூலமாக வேலைக்குச் செல்வதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
தாமதமாக வந்த ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேசமயம், விம்கோ நகர் பணிமனை – டோல்கேட் இடையேயும் மற்றும் விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை இடையேயும் வழக்கம் போல மெட்ரோ சேவை இயக்கப் படுகிறது என்றும், தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விம்கோ நகர் – வண்ணாரப்பேட்டை இடையே ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறை பொறியாளர்கள், ஊழியர்கள் போராடி இன்று காலை 11 மணிக்குப் பிறகு சரி செய்தனர். இதையடுத்து இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்துக்கு பிறகு, மெட்ரோ ரயில் சேவை சீரானது. விமான நிலையம் – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கத் தொடங்கியது.