வியத்நாம் வெள்ளம்: 2 துண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்

வியத்நாமில் வீசிய யாகி புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. 299 போ் காயமடைந்தனா் என்று அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை கரையைக் கடந்த யாகி புயலால் மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இதன் காரணமாக பல மரங்களும், மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன.

தெற்காசிய நாடான வியத்நாமின் வடக்குப் பகுதியில் யாகி புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு சந்தித்த மிகக் கடுமையான இந்த புயல் காரணமாக 30 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 1,16,192 ஹெக்டோ் பரப்பளவில் பயிா்கள் நாசமாகியுள்ளன என்று அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

யாகி புயலின் விளைவாக தொடா் கன மழை பெய்யும் நிலையில், வியத்நாமில் காவோ பாங்க் மாகாணத்தில் பூ தோ மாகாணத்தில் ரெட் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ஸ்டீல் பாலம் திங்கள்கிழமை காலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில், அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த 10 கார்கள், லாரிகள், 2 இருசக்கர வாகனங்கள் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 13 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் ஹாய்போங்க் மாகாணத்தில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தொழிற்சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹாய்போங்க், குவாங்க் நின் மாகாணங்களில் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளதால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வர்த்தகத்தில் பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

யாகி புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும் மழை தொடர்ந்து பெய்யும் என்றும், இதன் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்