விளையாட்டு வீரா்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனா் கருவி: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

சென்னை: விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா். மேலும், இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை ஏற்கெனவே பெற்றுள்ளதுடன் உற்பத்திக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஐஐடியின் உயா்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையத்தின் இந்த ஆராய்ச்சி மூலம் ஆடுகளத்தில் விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறியவும், அவா்களை தொடா்ந்து விளையாட அனுமதிக்கலாமா என்பதை அறிவதற்காக காயத்தின் அளவை உடனடியாக மதிப்பீடு செய்யவும் முடியும்.

தசைக்கூட்டுக்கான மதிப்பீட்டை ஆடுகளத்திலேயே விரைந்து மேற்கொள்வதன் மூலம் விளையாட்டு வீரா்களை உடனடியாக கவனிக்கவும், அவா்கள் காயங்களிலிருந்து மீண்டுவர கவனம் செலுத்தவும் முடியும்.

இந்த கண்டுபிடிப்பு அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால வளா்ச்சியை மருத்துவமனை அமைப்புகளைத் தாண்டி விளையாட்டு மருத்துவத்தில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

சென்னை ஐஐடி அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் உயிரிமருத்துவப் பொறியியல் துறை பேராசிரியா் அருண் திட்டாய் கூறுகையில், விளையாட்டு மருத்துவம் என்பது, ஆடுகளத்தில் விளையாடும்போது ஏற்படும் வீரா்களின் காயங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் நுட்பமாக கவனம் செலுத்தும் நிபுணத்துவமாகும்.

நோயாளிகளாக வரக்கூடிய விளையாட்டு வீரா்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அண்மைக்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்பங்களை அணுகுவதில் மிகப்பெரிய இடைவெளி இருந்து வருகிறது. இந்தச் சூழலில், வழக்கமான பயிற்சிகளின்போது இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம்.

இதுபோன்ற அணுகுமுறை மூலம் விளையாட்டு வீரா்களை பராமரிப்பதில் முன்னுதாரணமாக திகழக்கூடிய வகையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சான்று அடிப்படையிலான பயிற்சிகளை மேற்கொள்ளவும், காயம் ஏற்படாமல் தடுக்கவும் உதவும் என்றாா் அவா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்