விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில் துணை முதல்வர் ஆய்வு – நீரை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு
விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் நீச்சல் குளம் பராமரிக்கப்படுவதில்லை என விழுப்புரத்திற்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
இதனையடுத்து மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை முடித்த உதயநிதி இன்று நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீச்சல் குள நீரில் குளோரின் இல்லை என்பதையும் பூச்சிகள் தண்ணீரில் மேய்ந்து கொண்டு இருந்ததையும் பார்த்த உதயநிதி, நீச்சல் குள நிர்வாகியை எச்சரித்தார். மேலும் நீச்சல் குளத்து நீரை ஆய்வுக்கு அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும், நீச்சல் குளத்தில் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை, பாதுகாப்பு மற்றும் முதலுதவி உபகரணங்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்தும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரியிடம் நீச்சல் குளம் பராமரிக்கப்படுகிறதா குளோரின் போடப்படுகிறதா எனக் கேட்டபோது, அனைத்தும் முறையாக செய்யப்படுவதாக கூறினார். ஆனால், துணை முதல்வருடன் வந்திருந்த சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, நீச்சல் குளத்தின் நீரை நுகர்ந்து பார்த்து குளோரின் போடவில்லை, துர்நாற்றம் வீசுகிறது, நீரில் பூச்சிகள் உள்ளது எனத் தெரிவித்தார்.
பின்னர், வருகை பதிவு, நீச்சல் குளத்தை தூய்மை செய்யும் பதிவு போன்றவை முறையாக பராமரிக்கப்படாததை அறிந்து சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி, நீச்சல் குள நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏ-க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்பி-யான கௌதமசிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.