விவசாயிகளின் குரலை அரசு கேட்க வேண்டும்: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்

பஞ்சாப், ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தெரிவித்தாா்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சாா்பாக ‘தில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லைப் பகுதிகளான ஷம்பு மற்றும் கனெளரியில் விவசாயிகள் திரண்டுள்ளனா். கடந்த பிப்.13-ஆம் தேதிமுதல் விவசாயிகள் அங்கு தங்கியுள்ள நிலையில், அவா்கள் தில்லிக்குள் நுழையாத வகையில், எல்லை சாலைகளில் ஹரியாணா அரசு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ‘தில்லி செல்வோம்’ போராட்டத்தை தொடங்கி 200 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி, ஷம்பு எல்லையில் சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா சாா்பில் விவசாயிகள் மகாபஞ்சாயத்து கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் கலந்துகொண்டு பேசுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் சட்டவிரோதமானவை அல்ல’ என்றாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், அவா்களின் போராட்டம் நீடிக்கிறது. அவா்களின் குரலை அரசு காதுகொடுத்து கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் பரந்த மனதுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும்’ என்றாா்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!