விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஜி.கே.வாசன்

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்களை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக அரசு, விவசாயத்தைப் பாதுகாக்க, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களின் கோரிக்கைகளை காலத்தே நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடன் முறையாக, முழுமையாக வழங்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதாவது விவசாயிகள் அவர்களின் விவசாயப் பரப்பளவிற்கு ஏற்ப கடன் பெற்று விவசாயம் செய்ய முற்படுகின்றனர். இச்சூழலில் பயிர் செய்யும் பரப்பளவுக்கு ஏற்ப கடனை வழங்க வேண்டும்.

ஆனால் சில வங்கிகளில் பயிர் செய்யும் பரப்பளவுக்கு ஏற்ப கடனை வழங்காமல் குறைத்து வழங்குவதால் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதிலும் தட்டுப்பாடு இருப்பதாக தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் நிதி பற்றாக்குறையால் வங்கிகளில் போதிய அளவிற்கு பணம் இருப்பில் இல்லை எனக்கூறுவது விவசாயத்தைப் பாதுகாக்க வழிவகுக்காது. அதே போல தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் அனைத்து வகையான உரங்களும் தேவையான அளவு இருப்பில் இருப்பதில்லை என்பதும் முறையல்ல.

விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் மற்றும் விதைகளை வட்டார வேளாண் மையங்களில் வழங்குவதைப் போல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்க வேண்டும். தற்போது விவசாயிகள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு சென்று தேவையான விதைகளை வாங்குவதற்கு காலநேரம், அலைச்சல், செலவு ஆகிய சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் தேவையான விதைகளை அவ்வப்போதே வழங்கினால் அந்தந்த கிராமப் பகுதி விவசாயிகள் சிரமமின்றி வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும். எனவே தமிழக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளான பயிர் கடன், உரங்கள், விதைகள் ஆகியவற்றை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் காலத்தே வழங்க தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

Pune: NCP Expels Leader Vijay Dakle for Contesting Against Chandrakant Patil

Glenn Maxwell’s Iconic Innings Of 201* Against Afghanistan Completes One Year; Here Are Some Glimpses

Mizoram: Assam Rifles In Collaboration With Mizoram Police Recover War-Like Stores From Serchhip-Thenzawl Road; Visuals Surface