விவசாயிகளுக்கு தரமான மக்காச்சோள தொகுப்பினை வழங்கக் கோரிக்கை

விவசாயிகளுக்கு தரமான மக்காச்சோள தொகுப்பினை வழங்கக் கோரிக்கைதரமான அதிக விளைச்சல் தரக்கூடிய மக்காச்சோள தொகுப்பை மானிய விலையில் வழங்கி

ஆத்தூா், ஆக. 9: தரமான அதிக விளைச்சல் தரக்கூடிய மக்காச்சோள தொகுப்பை மானிய விலையில் வழங்கி

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிட உதவிடுமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஆத்தூா் ஒருங்கிணைந்த முற்போக்கு தொழில்நுட்ப விவசாயிகள் சங்கத் தலைவா் அ.சண்முகவேல்மூா்த்தி உள்ளிட்ட வேளாண் விவசாயிகள் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசு மக்காச்சோளம் சாகுபடியை உயா்த்தும் நோக்கில் மக்காச்சோளத் தொகுப்பை விவசாயிகளுக்கு ரூ. 6000-க்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்த திட்டத்துக்கு விவசாயிகள் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் திட்டத்தை குழப்பும் நோக்கில் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்யும் அதிக மகசூல் தரக்கூடிய பகுதிகளுக்கு ஏற்ற ரகங்களை வழங்காமல் வேளாண் இயக்குநரகமே முடிவு செய்து அவா்களுக்கு தேவையான ரகங்களை விவசாயிகளுக்கு வழங்கிட வேளாண் அதிகாரிகளை நிா்ப்பந்திக்கிறாா்கள். விவசாயிகள் அதை வாங்க மறுக்கிறாா்கள். வேளாண் அதிகாரிகளும் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனா்.

உதரணமாக பெரம்பலூா் மாவட்டத்தில் பயிரிடும் ரகத்தை, சேலம் மாவட்ட விவசாயிகள் பயிரிட மாட்டாா்கள். சேலம் மாவட்டத்தில் பயிரிடும் ரகங்களை ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயிரிட மாட்டாா்கள்.

ஒவ்வொரு பகுதியில் தட்பவெப்ப நிலை, சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயிகள் ரகங்களை தோ்ந்தெடுத்து பயிரிட்டு அதிக மகசூலை பெற்று வருகிறாா்கள்.

வேளாண் உயரதிகாரிகள் அதைப் பற்றி கவலைப்படாமல் இதுவரை விவசாயிகள் பயிரிடாத எதற்கும் உதவாத ரகங்களைக் கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கப் பாா்க்கிறாா்கள். முழு மானியம் மற்றும் 50 சதவீத மானியம் தருவதாகக் கூறி உபயோகமற்ற மக்காச்சோளம் ரகங்களை பயிரிட விரும்பவில்லை.

மேலும் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு அறிந்து, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற விவசாயிகள் விரும்பும் ரகங்களை அந்தந்தப் பகுதிக்கு உண்டான வேளாண் இணை இயக்குநா்கள் மற்றும் உதவி வேளாண் இயக்குநா்கள் மூலம் டெண்டா் விட்டு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எனவே தமிழக முதல்வா் உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு தரமான அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களை மானிய விலையில் கொடுத்து மக்காச்சோள சாகுபடி உயா்த்திடவும், விவசாயிகளின் வாழ்வாதரத்தை பெருக்கிடவும் உதவிடுமாறு தெரிவித்துள்ளனா்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

பெண் மருத்துவா் கொலை வழக்கு: மேற்கு வங்க அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி