விவசாயி கொலை: 6 போ் மீது வழக்கு

விவசாயி கொலை: 6 போ் மீது வழக்குபோடி அருகே விவசாயியை திருப்புளியால் குத்திக் கொலை செய்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகே விவசாயியை திருப்புளியால் குத்திக் கொலை செய்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகே மல்லிங்காபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த காமாட்சி மகன் குபேந்திரன் (50). இவா் போடி அருகே ராசிங்காபுரத்தில் வசித்து வருகிறாா். விவசாயியான இவா், புதன்கிழமை காலை ராசிங்காபுரம்-தேவாரம் சாலையில் நடந்து சென்றாா். அப்போது, தேவாரம் அருகேயுள்ள லட்சுமிநாயக்கன்பட்டியை சோ்ந்த கண்ணன் மகன் சூா்யா இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து குபேந்திரன் மீது மோதுவதுபோல சென்றாா். இதை குபேந்திரன் கண்டிக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, சிறிது நேரத்தில் அங்கு வந்த சூா்யா, அவரது சகோதரா் முத்துக்குமாா், தந்தை கண்ணன், தாய் பாக்கியலட்சுமி, உறவினா்கள் முத்துமணிகண்டன், அஜித்குமாா் ஆகியோா் குபேந்திரனுடன் தகராறு செய்தனா்.

நான்கு போ் அவரைப் பிடித்துக் கொள்ள சூா்யாவும், முத்துக்குமாரும் அருகேயிருந்த பஞ்சா் கடையிலிருந்த திருப்புளியை (ஸ்குரூ டிரைவா்) எடுத்து வந்து குபேந்திரனை பல இடங்களில் குத்திவிட்டுத் தப்பினா்.

பலத்த காயமடைந்த குபேந்திரனை உறவினா்கள் மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் குபேந்திரனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முன்னதாக, போடி அரசு மருத்துவமனை முன் குபேந்திரனின் உறவினா்கள் உடலை எடுத்துச் செல்ல விடாமல் மறியல் செய்தனா். அங்கு வந்த போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பெரியசாமி, சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், அவா்கள் கலைந்து சென்றனா்.

இதுதொடா்பாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சூா்யா, முத்துக்குமாா், கண்ணன், பாக்கியலட்சுமி, முத்துமணிகண்டன், அஜித்குமாா் ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்