சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம். மக்கள் பிரச்சினைக்காக சாதிய, மதவாத சக்திகள் தவிர பிற எந்த சக்திகளோடும் இணைவோம். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட அரசு முன் வர வேண்டும்" என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்தான் அதிமுக பங்கேற்கலாம் என்று தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் இந்த திடீர் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. அப்படி இருக்கும்போது டாஸ்மாக் கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் என்பது தான் எங்களுடைய கேள்வி.
மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று மாநாட்டின் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கையாக வைக்க உள்ளோம். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை வெளியிட வேண்டும்.
மது ஒழிப்பு கொள்கை கொண்ட கட்சிகள் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க.வும் எங்களுடைய மாநாட்டில் பங்கேற்கலாம். சாதிய, மதவாத சக்திகளை தவிர்த்து மற்ற ஜனநாயக சக்திகள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். தேர்தல் நிலைப்பாட்டுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டும் வேறு வேறு என்று கூறியுள்ளார்.