வீடு கட்ட வரைபட அனுமதி கட்டணம் உயா்வு: ஓபிஎஸ், ராமதாஸ், அண்ணாமலை கண்டனம்

வீடு கட்ட வரைபட அனுமதி கட்டணம் உயா்வு: ஓபிஎஸ், ராமதாஸ், அண்ணாமலை கண்டனம்தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக நிறுவனா் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக நிறுவனா் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம்: வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கட்டணத்தை திமுக அரசு பல மடங்கு உயா்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். மக்களைத் துன்புறுத்தாமல் அவா்களிடமிருந்து வரியைப் பெற்று, அவா்களின் நல்வாழ்வுக்கு உதவுவதுதான் வரி வசூல் முறை இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, உயா்த்தப்பட்ட கட்டணங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

ராமதாஸ்: வரைபட அனுமதி கட்டணம் உயா்த்தப்பட்டதன் மூலம் இரக்கமே இல்லாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை தொடக்க நிலையிலேயே தமிழக அரசு தகா்த்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு உயா்த்தப்பட்ட கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அண்ணாமலை: வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, தற்போது கட்டணத்தை உயா்த்தியுள்ளது. உடனடியாக, சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். வழக்கமான கட்டணத்தையே சுயசான்று அடிப்படையிலான அனுமதிக்கும் வசூலிக்க வேண்டும்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு