வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் இழப்பீடு உத்தரவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்

வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் இழப்பீடு உத்தரவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்

சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல்இழப்பீடு வழங்குவது தொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த வீரப்பனை பிடிப்பதற்காக கடந்த 1995-ம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்ட நிலையில், 2004-ம்ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் வீரப்பனை சுட்டுக்கொன்றனர்.

இந்த தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு உரிய இழப்பீடு வழங்கதேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட்டது.

அதன்படி தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கியது. மேலும் காவிரிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட கிராமத்தினருக்கு ரூ.8 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் செலவில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்தது.

இந்நிலையில் வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்கும்படி சேலம் மாவட்டம் விடியல் மக்கள் நல்வாழ்வு அமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக பரிசீலித்துஉரிய உத்தரவு பிறப்பிக்க தேசியமனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

கூடுதலாக ரூ. 3.79 கோடி: அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக ரூ.3 கோடியே 79 லட்சத்து 49 ஆயிரத்து 976-ஐ வழங்க தமிழக மற்றும் கர்நாடக தலைமைச் செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக தலைமைச் செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி. குமரேசன், அரசு வழக்கறிஞர் பி.ஹரிஷ் ஆகியோர் ஆஜராகி, ஏற்கெனவே தமிழக அரசு தரப்பில்சரியான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்குமாறு அறிவுறுத்தி நோட்டீஸ்பிறப்பித்து விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ள னர்.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்