அங்காரா,
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் மும்பை நகரில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு புறப்பட்டுச் சென்ற விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் ஒரு துண்டு காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 247 பேர் பயணம் செய்த அந்த விமானம் துருக்கியில் உள்ள எர்சரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து அந்த விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்காததால், விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலியானது என அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதற்கிடையில், எர்சரம் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை பிராங்பர்ட் நகருக்கு அழைத்துச் செல்ல விஸ்தாரா நிறுவனம் சார்பில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல், எர்சரம் விமான நிலையத்தில் விமான சேவைகள் வழக்கம்போல் இயங்க தொடங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.