வெப்பம்.. நெரிசல்.. சாதனைக்காக நடந்த விமான சாகசத்தை சோதனையாக்கியது எது?

சென்னை மெரினா கடற்கரையில், இந்திய விமானப் படையின் விமான சாகசத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதில், கூட்ட நெரிசல் மற்றும் வாட்டிய வெப்பத்தால் 5 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால், சென்னை மட்டுமல்லாமல், அதன் அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் விமான சாகசத்தை நேரில் காண வேண்டும் என்று சென்னை மெரினாவில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

பலரும் பேருந்துகளில் இருந்து இறங்கி மெரீனாவை நோக்கி நடைப்பயணமாகச் சென்றனர். அப்போதே நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. பலரும் சில கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே சாலைகளில் நின்றவாறு பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை மெரினாவில் குவிந்த மொத்த மக்கள் தொகை 15 லட்சம் என்கிறது தரவுகள். ஆனால், அதற்கும் மேல் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வரை வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விமான சாகசம்

சோதனையாக்கியது எது?

விமான சாகசம் திட்டமிட்டபடி தொடங்கி நடத்தப்பட்டது. ஆனால், சென்னை மெரினாவில் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி, நிகழ்ச்சி முடிந்ததும் ஒரே நேரத்தில் மக்கள் வெளியேற முயன்றதே முதல் பிரச்னை.

சென்னை மெரினாவில் நிகழ்ச்சி 11 மணிக்கு என்றால், சற்று தொலைவில் இருந்த மக்கள் காலை 9 மணிக்குப் புறப்பட்டனர். எனினும் 10 மணிக்குள்ளேயே சென்னை மெரினாவிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது. இது வெறும் நெரிசல் அல்ல.. கிட்டத்தட்ட போக்குவரத்து நிறுத்தம் என்றே சொல்லும் அளவுக்கு மக்கள் பல மணி நேரம் சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்தில் சிக்கியிருந்தனர்.

மக்கள் புறப்பட்டது முதல் போக்குவரத்து நெரிசல், விமான சாகசம், பிறகு திரும்புவதில் ஏற்பட்ட தாமதம் என பல மணி நேரம் முழுக்க முழுக்க வெயிலில் நின்றிருந்தனர். இதில் போதுமான தண்ணீர், கழிப்பறை வசதி இல்லாமல் சில கிலோ மீட்டர் வரை நடந்து சென்றது.

இதற்கெல்லாம் சேர்த்து, ஞாயிற்றுக்கிழமை கடுமையான வெயில் கொளுத்தியது.

மெரினாவுக்குள் படிப்படியாக சென்ற கூட்டம் ஒரே நேரத்தில் வெளியேறும்போது ஏற்பட்ட நெருக்கடியால் பலருக்கும் மயக்கம் ஏற்பட்டது.

வாகனத்தை எடுக்கச் சென்றவர்கள், நெரிசலில் சிக்கியவர்கள் ஒரே இடத்தில் ஒரு மணி நேரம் வரை நிற்கவேண்டிய அவலம் ஏற்பட்டது.

சிலர், தடுப்புகளை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றதால், குழந்தைகள் உள்பட ஏராளமானோருக்கு லேசான காயங்கள்கூட ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

மெரினாவைச் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டும் மயக்கமடைந்தவர்கள் இருந்த இடத்துக்குச் செல்வதிலும், அவர்களை ஆம்புலன்ஸ் அருகே அழைத்து வருவதிலும் நெரிசல் மிகப்பெரிய தடையாக மாறியது.

ஒருவர் மயக்கமடைந்து, ஆம்புலன்ஸில் ஏற்றவே குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை தாமதமாகியிருக்கிறது.

மெரினாவில் கணக்குத் தெரிந்தவரை 230 பேர் வரை மயக்கமடைந்து முதலுதவி சிகிச்சை பெற்றனர். இவர்களில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 93 பேர்.

பலரும், அண்டை மாவட்டங்களிலிருந்து சனிக்கிழமை இரவே சென்னை வந்து காத்திருந்திருக்கிறார்கள்.

குடிக்கத் தண்ணீர் இல்லாமல், கழிப்பறை செல்ல முடியாமல், உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் கொளுத்தும் வெயிலில் ஒரே நேரத்தில் பலரும் ஒரே இடத்தில் நின்றிருந்தது நிலைமையை மோசமாக்கியது.

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பலரும் குடைகள் வைத்திருந்தாலும், கடற்கரை அருகில் இருந்த அந்த வெயில் மற்றும் காற்றில் ஈரப்பதம் குறைந்திருந்தது இணைந்து, உடலின் நீர்ச்சத்தை வெகு விரைவாகக் குறைத்தது.

மயக்கமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம், ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் ஒரு மணிநேரம் வரை சிக்கியிருந்தது போன்றவை உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

காலாண்டு விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமை, விமான சாகசம் தொடர்பான விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களை நேரடியாகச் சென்றடைந்த விமான சாகச நிகழ்ச்சியின் தகவல் போன்றவை அதிகப்படியான கூட்டத்தை கூட்டியது.

இதுபோன்ற சாகசத்தை மீண்டும் காண முடியாது என்ற மக்களின் எண்ணம், தற்போது எங்குச் சென்றாலும் அதனை விடியோ எடுத்து ஸ்டேட்டஸில் வைக்கும் மனப்பான்மை போன்றவைகளும் பலரையும் மெரினாவை நோக்கி அழைத்துச் சென்றது.

சென்னை மெரினா செல்வோரால், சாதாரண ஊர்களில் ரயில் டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் கூட எடுக்க முடியாமல், நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால், அத்தியாவசியமாக மருத்துவமனைக்கோ அலுவலகத்துக்கோ செல்ல வேண்டியவர்கள் கூட இவர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டனர்.

லட்சக்கணக்கானோரை வரவழைப்பது மட்டுமல்ல, அவர்களை பத்திரமாக வெளியேற்றுவது எப்படி என்ற புரிதல் இல்லாமல், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைப் பகுதிக்குள்ளேயே சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் அதற்கான தீர்வையும், நிகழ்ச்சி முடியும் போது மக்கள் ஒரே நேரத்தில் வெளியேறுவார்கள் என்று திட்டமிட்டு அவர்களை வெளியேற்றுவதற்கான வழிகளை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்.

எந்த எண்ணிக்கையில் மக்கள் வந்தால் அவர்களை சமாளிக்க முடியும் என்று திட்டமிட்டு பாஸ் போன்றவற்றை கடந்த வாரம் முதலே ரயில் நிலையங்கள் மூலம் வழங்கியிருக்கலாம்.

சாதாரண கடை வாசல்களில் வாகன நிறுத்துமிடங்களில் வாகனத்தை நிறுத்தியவர்கள் எடுப்பதற்கே சிரமம் ஏற்படும் நிலையில், லட்சக்கணக்கானவர்கள் கூடுமிடத்தில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களின் நிலைமைதான் மிகவும் கவலைக்கிடமாகியிருக்கிறது. அதை மாற்ற வேறு வழிவகைகளைக் கையாண்டிருக்கலாம்.

இதில் மிக முக்கிய பிரச்னை, மயக்கமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகும் கூட, அவர்களுக்கு இவ்வாறு நேர்ந்ததே தெரியாமல், அவர்களுடன் வந்தவர்கள் அவர்களுக்காக பல மணி நேரம் காத்திருந்திருக்கிறார்கள். சிலர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டாலும், அவர்கள் எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் நின்றிருந்திருக்கிறார்கள்.

நல்வாய்ப்பாக பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, நெரிசலில் சிக்கி யாரும் பலியாகவில்லை என்றே அங்கு சிக்கியவர்கள் கூறுகிறார்கள். கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம் என்றும் பங்கேற்று திரும்பியவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து வெளியான விடியோவைப் பார்க்கும்போது, நெரிசலில் யாராவது ஒருவரை கூட்டம் தண்டவாளத்தில் தள்ளியிருந்தால் கூட நிலைமை விபரீதமாகியிருக்குமே என்று வீட்டிலிருந்து விடியோவைப் பார்த்தவர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.

சாதனைக்காக நடத்தப்பட்டு சோதனையாகி, பல குடும்பங்களை வேதனைக்குள்ளாக்கியருக்கிறது விமான சாகச நிகழ்ச்சி.

நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?

குடும்பத்துடன் சென்றவர்கள், ஒருவரை ஒருவர் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குக் கூட்ட நெரிசலால் தள்ளப்பட்டோம். இதனால், நாங்கள் வெளியேற வழி கிடைத்தாலும், மற்றவர்களுக்காகக் காத்திருக்கும்போது அது நிலைமையை மோசமாக்கியது.

வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவசரமாக கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்றாலும்கூட எதுவும் செய்ய முடியாத நிலையில் நின்றிருந்தனர்.

பலரும், குடும்பத்துடன் வந்து, தனித்தனியாகவே வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அவ்வாறு செல்ல முடியாதவர்கள் சாலையில் பல மணி நேரம் காத்திருந்திருக்கிறார்கள். அவர்களது நிலைதான் மோசமாகியிருக்கிறது.

விமானப் படையின் 92வது ஆண்டுவிழாவை குறிக்கும் வகையில், மெரினாவில் நடத்தப்பட்ட இந்த விமான சாகச நிகழ்வு, அதிகம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி என லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

Salman Khan’s Sisters Alvira, Arpita & Others Spotted To Pay Their Final Tributes To Late Baba Siddique

From Ramayan To Mahabharat: Puneet Issar’s ‘Epic’ Journey On Stage

Shraddha Kapoor Dazzles As Kalki’s Showstopper In Dreamy Lehenga At Lakme Fashion Week