வெல்லப்போவது யார்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

வெல்லப்போவது யார்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.அன்னியூர் அ.சிவா(திமுக) – சி.அன்புமணி(பாமக) – பொ.அபிநயா(நாதக)

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், பிற்பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை10-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஜூன் 10-ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது.

ஜூன் 14-ஆம் தேதி முதல் 21 -ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, ஜூலை 26-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுகவின் அன்னியூர் அ.சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாதகவின் பொ.அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

தொடர்ந்து 15 நாள்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்றதேர்தல் பிரசாரம் ஜூலை 8-ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில், ஜூலை 10-ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதலே வாக்குப்பதிவு மையத்துக்கு ஆர்வத்துடன் சென்ற வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தி, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவாகும்.

வாக்குப்பதிவு நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில், இதற்காக பயன்படுத்தப்பட்ட 552 வாக்குப்பதிவுக் கருவிகள், 276 கட்டுப்பாட்டுக் கருவிகள், 276 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

20 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி, தேர்தல் நடத்தும் அலுவலர் மு.சந்திரசேகர் தலைமையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு, அறை திறக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. முன்னதாக விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த அஞ்சல் வாக்குகள் கொண்ட பெட்டி எடுக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

சனிக்கிழமை காலை 8 மணிக்கு முதலில் அஞ்சல் வாக்குகளைக் கொண்ட பெட்டியின் சீல் உடைக்கப்பட்டு, வாக்குகள் பிரிக்கப்பட்டு, 50 எண்ணிக்கை கொண்டு கட்டுகளாக கட்டப்பட்டு பின்னர் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடிந்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெறும்.

இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேஜை ஒன்றுக்கு ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் பணியில் இருப்பர். அஞ்சல் வாக்கு எண்ணிக்கைக்கு 2 மேஜைகள்அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் பணிக்கு கிராம உதவியாளர்கள், இதர பணிகளுக்காக வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், இதரப் பணியாளர்கள் என மொத்தமாக150 பேர் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் 1,200 போலீஸார்:வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை உள்ளிட்ட பகுதிகளில் மூன்றடுக்குப் பாதுகாப்புடன்சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் 150 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தவிர பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வெளி வளாகப் பகுதி, சாலைகள், பிற இடங்கள், விக்கிரவாண்டி நகரப் பகுதிகளில், ரோந்துப் பணிகளில் என பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் 1200 போலீீஸார் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட எஸ்.பி. தீபக் சிவா தலைமையில், 4 ஏ.டி.எஸ்.பி.க்கள், 7 டி.எஸ்.பிக்கள், 28 காவல் ஆய்வாளர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல்படையைச் சேர்ந்த 320 வீரர்கள், மத்தியத் தொழில்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 16 வீரர்கள், பிற காவலர்கள் என மொத்தமாக 1,200 பேர் பாதுகாப்புப் பணியில் சனிக்கிழமை அதிகாலை முதல் ஈடுபட்டனர். இதைத் தவிர ரோந்துப் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பிற்பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி