வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை தொற்று உறுதி

புது தில்லி: குரங்கம்மை பாதித்த நாட்டிலிருந்து, இந்தியா திரும்பிய இளைஞருக்கு அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கம்மை பாதிக்கப்பட்ட இளைஞருக்கு கிளேட் – 2 வகை தொற்று இருப்பதால் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட நபர், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கிளேட் – 1 வகை தொற்றுதான் ஆபத்தானது என்றும், ஆனால், இளைஞருக்கு கிளேட்-2 வகை தொற்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மத்திய அரசு கூறிருக்கிறது.

குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய இளைஞருக்கு நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கம்மை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

அவரது உடல்நிலை தற்போதுவரை சீராக இருப்பதாகவும், நிலைமைகளைச் சமாளிக்க நாட்டின் சுகாதாரத் துறை தயார் நிலையில் உள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

குரங்கு அம்மை எப்போது பரவியது?

குரங்கு அம்மை முதன்முதலில் 1958-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தத் தொற்று ஆப்ரிக்க நாடுகளில் வனப்பகுதிகளில் உள்ள குரங்குகளிடமிருந்து பரவியதாகவும் கூறப்படுகிறது.

உலகளவில், ஆப்ரிக்க நாடுகள் மட்டுமல்லாமல், வேறு கண்டங்களில் உள்ள நாடுகளிலும் தொற்ற பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்தியாவிலும் குரங்கு அம்மை பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்றவை அந்தத் தொற்றுக்கான அறிகுறிகளாகும்.

குரங்கம்மை பாதித்தவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக தொற்று மற்றவர்களக்குப் பரவக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

பல்வேறு நாடுகளில், குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்