வெள்ள அபாய பகுதிகள்: சென்னை மாநகராட்சி முக்கிய உத்தரவு!

சென்னையில் மழைநீர் தேங்கக்கூடிய வெள்ள அபாயப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த சென்னை பெருநகர மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் குறிப்பாக அக். 16 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க | 200 மி.மீ-க்கு மேல் மழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் – உதயநிதி

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 43 இடங்களில் உள்ள மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாததால் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சென்னையில் கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய 180 வெள்ள அபாய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றக்கூடிய மோட்டார் பம்புகள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் 25 இடங்களில் மழைநீர் தேங்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் மழைநீர் தேங்கினால் அவற்றை வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது