வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு – பப்புவா நியூ கினியா 136 ரன்கள் சேர்ப்பு

பப்புவா நியூ கினியா தரப்பில் செசெ பாவு அரைசதம் (50 ரன்) அடித்து அசத்தினார்.

கயானா,

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டி தொடரில் 2-வது நாளான இன்று வெஸ்ட்இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 2-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியா அணியுடன் ஆடி வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து பப்புவா நியூ கினியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டோனி உரா மற்றும் அசாத் வாலா ஆகியோர் களம் இறங்கினர். இதில் டோனி உரா 2 ரன்னிலும், அடுத்து வந்த லேகா சியாக்கா 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து செசெ பாவு, அசாத் வாலா உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் அசாத் வாலா 21 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து களம் இறங்கிய ஹிரி ஹிரி 2 ரன்னிலும், சார்லஸ் அமினி 12 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து கிப்ளின் டோரிகா களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய செசெ பாவு அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. பப்புவா நியூ கினியா தரப்பில் அதிகபட்சமாக செசெ பாவு 50 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட உள்ளது.

Related posts

சேப்பாக்கத்தில் இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் போட்டி; நாளை டிக்கெட் விற்பனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா சாம்பியன்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 211/5