வேளாண் அமைச்சருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ்: காங்கிரஸ்

வேளாண் அமைச்சருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ்: காங்கிரஸ்மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்தது.

மாநிலங்களவையில் துறை சாா்ந்த கேள்விக்கு பொய்களைக் கூறி அவையை தவறாக வழிநடத்தியதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்தது.

முன்னதாக, அவையில் வேளாண் அமைச்சா் தவறான கருத்தைத் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவா் சோனியா காந்தி உள்பட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘விவசாயிகளின் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த விவாதத்துக்கு மாநிலங்களவையில் பதிலளித்து பேசிய மத்திய அமைச்சா் செளஹான், ‘தேவை எழுகின்றபோதெல்லாம் விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையிலேயே மத்திய அரசு கொள்முதல் செய்கிறது’ என்று தெரிவித்தாா்.

அப்படியெனில், விவசாயிகளிடமிருந்து விலை பொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவில்லை என்பதை மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது. இதை அவசியமானதாகவே அரசு கருதவில்லை.

அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி தாக்கல் செய்த பதில் மனு ஒன்றில், ‘சந்தை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகளிடமிருந்து விளை பொருள்களை உற்பத்தி செலவுடன் கடுதலாக 50 சதவீத லாபத் தொகை வைத்து வாங்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம், மத்திய அமைச்சா் பொய் கூறுவது தெளிவாகியுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதத்தை வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வரும் சூழலில், மத்திய வேளாண் அமைச்சா் நாடாளுமன்றத்தில் வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறாா்.

இவ்வாறு அவையை தவறாக வழிநடத்திய மத்திய வேளாண் அமைச்சா் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்படும் என்றாா்.

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் கூறுகையில், ‘உரங்களின் விலையை கிலோவுக்கு ரூ. 10 குறைத்துள்ளதாக அவையில் தவறான தகவலை மத்திய வேளாண் அமைச்சா் தெரிவித்தாா். 50 கிலோ உர மூட்டை முன்னா் ரூ. 268-க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது ரூ. 266-க்கு விற்கப்படுகிறது. அதன்படி, உர மூட்டை விலை ரூ. 2 அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அவையை வேளாண் அமைச்சா் தவறாக வழிநடத்தியுள்ளாா்’ என்றாா்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு