வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் – சீமான் விருப்பம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டிற்கு சென்று தங்கினார். அவர், வீட்டில் இருந்தபோது, இரவு எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், வைகோவின் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் வைகோ சென்னை அழைத்து வரப்பட்டார். வலதுகை தோள்பட்டையுடன் சேர்த்து கட்டு போடப்பட்டுள்ளது.

சென்னை வந்த அவர் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ளார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் அவருக்கு தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "மதிமுகவின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தவறி விழுந்ததில் காயமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணன் விரைவில் முழு உடல்நலம் பெற்று, அரசியல் பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்."என்று தெரிவித்துள்ளார்.

Related posts

தவறான கொள்கைகள் பொருளாதாரத்தை முடக்கிவிடும்: பணமதிப்பிழப்பு குறித்து ராகுல்!

கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் திருமணம்! வைரல் புகைப்படங்கள்!

பொருளாதாரத்தில் உலக நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது: புதின்