ஷாங்காய் மாநாடு: பாகிஸ்தான் செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அக்டோபர் 15, 16 ஆகிய நாள்களில் பாகிஸ்தான் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

கடைசியாக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். 2015 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் குறித்த மாநாட்டிற்காக இஸ்லாமாபாத் சென்றிருந்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை வருகிற அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் தலைமையேற்று நடத்துகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், ஷாங்காய் மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது.

ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் முக்கிய முடிவாகக் கருதப்படுவதால் முக்கியத்துவம் பெறுள்ளது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2019 பிப்ரவரியில் பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கியதை அடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களை திரும்பப் பெறுவதாகவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் இந்தியா அறிவித்த பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் மோசமடைந்தன.

இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, ஒரு செல்வாக்கு மிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் கூட்டமைப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!