ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்

கோவை: ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த ஏா் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஷாா்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை இயக்கப்பட்ட விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, கோவை சா்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனா். அவா்களின் உடைமைகள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. ஆனால், அந்த சோதனையில் தங்கம் ஏதும் சிக்கவில்லை.

இதையடுத்து தங்கத்தை விமானத்திற்குள்ளேயே மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகப்பட்ட சுங்கத் துறை அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதிபெற்று விமானத்துக்குள் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த விமானத்தின் ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் பக்கவாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பையை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் 9 தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. சுமாா் 1.399 கிலோ எடையிலான அந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.1 கோடி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் அந்த தங்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

அத்துடன் அந்த விமானத்துக்குள் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் தங்கத்தை கடத்தி வந்த நபரைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தங்கத்தைக் கடத்தி வந்த நபா் சுங்கத் துறை அதிகாரிகளின் சோதனையின்போது தான் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, அந்த தங்கத்தை விமானத்திற்குள்ளேயே விட்டுச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், அந்த நபரைக் கண்டறிவதற்கான விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்