மிட்செல் ஸ்டார்க்கை ரூ. 24.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் வாங்கியது.
புதுடெல்லி,
இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு புதிய ஆலோசகராக பொறுப்பேற்ற கவுதம் கம்பீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் ஆலோசகராக வந்ததும் மீண்டும் சுனில் நரேனை அவர் தொடக்க வீரராக களமிறக்கினார். அதை பயன்படுத்திய சுனில் நரைன் 400+ மேற்பட்ட ரன்கள் குவித்து 17 விக்கெட்டுகள் எடுத்து தொடர்நாயகன் விருதை வென்றார்.
அதேபோல மிட்செல் ஸ்டார்க்கை வாங்கிய அவருடைய முடிவும் வெற்றிகரமாக அமைந்தது. இதற்கு முன் ஐ.பி.எல். வரலாற்றில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பெரியளவுக்கு அசத்தியதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆஸ்திரேலியா 2015, 2023 ஒருநாள் உலகக்கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய மிட்செல் ஸ்டார்க்கை ரூ. 24.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு கொல்கத்தா வாங்கியது. அதுவே ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு வீரருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச சம்பளமாகும்.
மறுபுறம் அந்த வாய்ப்பில் ஆரம்பத்தில் ஸ்டார்க் சுமாராக செயல்பட்டதால் கவுதம் கம்பீர் கிண்டலடிக்கப்பட்டார். ஆனால் ஐதராபாத்துக்கு எதிரான குவாலிபயர் 1 போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த ஸ்டார்க் இறுதிப்போட்டியிலும் 2 விக்கெட்டுகள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதுகளை வென்று கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் ரூ. 24.75 கோடிக்கு மிட்செல் ஸ்டார்க்கை வாங்கியது பற்றியும் ஆரம்பத்தில் அவர் சுமாராக செயல்பட்டது பற்றியும் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. "சமூக வலைதளங்களில் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. வல்லுனர்கள் வீரர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவார்கள். அது அவர்களின் வேலை. அதேபோல மக்கள் சமூக வலைதளங்களில் பேசுவார்கள். ஆனால் கடினமான நேரங்களில் வீரர்களிடம் உடைமாற்றும் அறையில் என்ன சொல்கிறோம் என்பது முக்கியம். மிட்செல் ஸ்டார்க் திறமையை நாங்கள் எப்போதும் சந்தேகித்ததில்லை. அவர் இந்த தொடரில் துருப்புச்சீட்டாக இருப்பார் என்பது எங்களுக்கு தெரியும்.
குவாலிபயர் 1 மற்றும் இறுதிப்போட்டியில் அவர் அற்புதமாக பந்து வீசினார். அவரை போன்ற பெரிய வீரர்கள் பெரிய போட்டியில் அசத்துவார்கள். பணத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. எனவே அவருடைய விலை எங்களுக்கு முக்கியமல்ல. அவர் எங்களுடைய அணிக்கு என்ன மதிப்பை சேர்க்கிறார் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி வீரர்கள் கவலைப்பட கூடாது. நீங்கள் 0 ரன்கள் எடுத்தால் விமர்சிக்கக் கூடிய அவர்கள் சதமடித்தால் பாராட்டுவார்கள். அந்த வகையில் கொல்கத்தா அணியில் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டதற்காக நாங்கள் ஸ்டார்க்கை மோசமாக உணர விடவில்லை" என்று கூறினார்.