ஹமாஸ் தலைவர் சின்வார் மரணம்; இஸ்ரேல் பிரதமர் உறுதி

ஹமாஸ் தலைவரின் மரணம் பற்றிய செய்தியை, பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேல் மக்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கும்படியும், நெதன்யாகு அவருடைய உதவியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.

அடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது.

இந்நிலையில், ஹனியே மரணத்திற்கு பின்னர், காசா பகுதிக்கான ஹமாஸ் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக சின்வார் அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில், அவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என தகவல் வெளியானது. எனினும், அது உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான யாஹ்யா சின்வார் மரணம் அடைந்து விட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உறுதி செய்திருக்கிறார். இதனை டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிகை தெரிவித்து உள்ளது.

ஹமாஸ் தலைவரின் மரணம் பற்றிய செய்தியை, பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேல் மக்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கும்படியும், நெதன்யாகு அவருடைய உதவியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன்பு, இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில், யாஹ்யா சின்வாரும் ஒருவராக இருப்பதற்கான சாத்தியம் பற்றி சோதனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சின்வாரின் உயிரிழப்பை நெதன்யாகு உறுதி செய்து உள்ளார்.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!