ஹரியாணாவில் ஆம் ஆத்மி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது! -கேஜரிவால்

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இம்மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக முனைப்புக் காட்டி வருகிறது. அதேநேரம், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. இதுதவிர ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளும் மோதுவதால் பலமுனை போட்டி காணப்படுகிறது.

இந்த நிலையில், தாப்வாலி பேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “கேஜரிவாலை பார்த்து திருடன் என்று சொன்னால் ஒட்டுமொத்த உலகமும் நம்பவே நம்பாது. இந்த நிலையில், முதல்வர் பதவியை துறந்துவிட்டு, நான் நேர்மையானவன் என்று நீங்கள் கருதினால் என்னை மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுங்கள் என்று தில்லி மக்களிடம் கேட்டுகொண்டுள்ளேன். நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மட்டுமே நான் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமருவேன்.

ஹரியாணாவின் புதல்வனாகிய என்னை பாஜக வன்மையாக துன்புறுத்தியது. ஆனால் ஹரியாணாவை சேர்ந்த ஒருவரை அவர்களால் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது.

ஹரியாணாவில் ஆம் ஆத்மி ஆதரவின்றி எந்தவொரு கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது. அப்படியிருக்கையில், ஹரியாணாவில் எங்கள்(ஆம் ஆத்மி) ஆதரவுடன் எந்த கட்சி அரசு அமைத்தாலும் இங்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதை ஆம் ஆத்மி உறுதிசெய்யும்” என்றார்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி